காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை , தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அன்புடன் அழைக்கப்பட்டார்.அண்ணா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் கஞ்சிவரம்) செப்டம்பர் 15, 1909, இல் நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர். அவர் தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளந்தார்.
மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை ஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட அண்ணாதுரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக சிறிது காலம் பணிபுரிந்தார்.
1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்), மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார் . ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
அண்ணா அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான அமைப்பாக 1917 இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது.
பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். பி.டி. தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயர் தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப்பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 இல் இந்திய தேசிய காங்கிரசால் தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.
அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பொற்ப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழை (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது) தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழ்கம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்.
பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது. இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்டு 15, 1947 அந்த நாளை கருப்பு தினமாக எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அண்ணா இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று. அண்ணா இந்தியாவின் சுதந்திரம் அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது. அது வெறும் ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல என்பதை வலியுறுத்தினார்.
திராவிடர் கழகம் ஜனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் அண்ணா முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிகூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்.
பெரியார் தேர்தலில் பங்குபெருவதால் தனது பகுத்தறிவு, சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) பெரியார் விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களை தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார்.
இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
அண்ணா, மற்றும் பெரியாரின் மருமகன் மற்றும் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத் மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதியக்க்டசி துவக்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பெற்றது. அண்ணாதுரை மேல்வகுப்பு சாதிப்பிரிவான முதலியார் வகுப்பைச் சார்ந்திருந்தாலும் கீழ்தட்டு சாதி வகுப்பினரின் சமூக உரிமைகளுக்காக பாடுபட்டமையால் அம்மக்களின் அபரிமிதமான செல்வாக்கை வெகு விரைவிலேயே பெற்றார் அவர் தொடங்கிய திமுக வும் செல்வாக்கை பெற்றது.
அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணா விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவாரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.
1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை. கட்டுப்பாடு, கடமை ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதபடுகின்றது. கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் - அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும்.
மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969 ல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு அண்ணாவின் நினைவாக அவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெரினா கடற்கரையில் அவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. அங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் அவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்றும் தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைகழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டுள்ளன. வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலை அரங்கம் என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் "அண்ணா கலை அரங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. 2009ம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார்.
No comments:
Post a Comment