affiliate marketing பார்த்ததும் சுட்டதும்: காமராஜர்

Tuesday, November 16, 2010

காமராஜர்



காமராஜர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராஜா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.


சிறை வாழ்க்கையும் படிப்பும்


தனது பள்ளிப் படிப்பை க்ஷத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழந்த துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார். எனவே ஆறாம் வகுப்பு வரையே படித்தார் இவர்.
பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராஜர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராஜுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆரவம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரஸின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.
ராஜாஜியின் தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராஜ் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார்.விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு அவர்களின் வாத திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார். 1940-ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த மாதிரியான சிறை வாழ்க்கைகளின் போது தான் காமராஜ் சுயமாகப் படித்துத் தன் கல்விஅறிவை வளர்த்துக் கொண்டார்.

தமிழக ஆட்சிப் பொறுப்பு


1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராஜாஜிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராஜர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம்சென்னை ராஜ்ஜியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)
குலக்கல்வித் திட்டத்தால் ராஜாஜியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராஜாஜிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராஜாஜி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம்; நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.
ஆனால் கட்சிசட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான், காமராஜர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று முதல்வரானதன் பின்னணி.
காமராஜர் அமைச்சரவை அமைத்த விதத்தில் குறிப்பிடத்தக்க அம்சம், பி.பரமேஸ்வரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை. (தாழ்த்தப்பட்டோர் கோவில்களில் நுழையவே எதிர்ப்பும் அனுமதி இன்மையும் இருந்த நாட்களில், தாழ்த்தப்பட்ட ஒருவர் அமைச்சர் என்கிற போர்வையில் போகும் போது பூரண கும்ப மரியாதை தரப்படுவதற்கு, ஆர்ப்பாட்டமில்லாமல் காமராஜர் செய்த ஒரு புரட்சி இது).
ராஜாஜி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் கட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராஜரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.

முதலமைச்சராக ஆற்றிய பணிகள்



காமராஜ் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
  • பாரத கனரக மின் நிறுவனம் (BHEL)
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC)
  • மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
  • இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
  • நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
  • கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
  • மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராஜரால் ஏற்படுத்தப்பட்டவை.

இறுதிக் காலம்


காமராஜருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராஜரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரஸ் தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராஜர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திராகாந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.

No comments:

Post a Comment